🌏கியாமத் நாளின் அடையாளங்கள்-தொடர் 22....
தஜ்ஜாலைக் கொல்வார்கள்
ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் 'எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர் களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் 'எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்'' என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின் வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறு வார்கள். அவர்கள் கான்ஸ்டான்டி நோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடனே அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.
அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காக படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5157
தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்'' என விடையளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 5238
தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5233
இந்த நிலையில் 'யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.
நூல் : முஸ்லிம் 5228
தொடரும்... இன்ஷா அல்லாஹ்....
No comments:
Post a Comment