🌏கியாமத் நாளின் அடையாளங்கள்🌏. தொடர்-7
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம்.
அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக பள்ளிகள் கட்டப்படுகின்றன.
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.
நெருக்கமான கடை வீதிகள்
அன்றைய காலத்தில் கடை வீதிகள் பெரிய அளவில் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் தான் மக்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும்.
ஆனால் இன்று கண்ட இடத்திலெல்லாம் கடைகளைக் காண்கிறோம்.
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஆண்களும், பெண்களும் ஏறக்குறைய சம அளவில் தான் இருந்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை.
ஆனால் இன்று பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
பெண் சிசுக் கொலை மூலம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை யைக் குறைக்க கொடியவர் சிலர் முயற்சி செய்தும் கூட ஆண்களை விட பெண்கள் தாம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர்.
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808
🌏கியாமத் நாளின் அடையாள்ங்கள்🌏. தொடர் 7.
பாலை வனம் சோலை வனமாகும்
இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நிலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக் கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம்.
எதற்கும் உதவாத பாலை நிலம்' என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமே.
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
கொலைகள் பெருகுதல்
மனிதனை மனிதன் கொன்று குவிப்பது தொன்று தொட்டு நடந்து வருவது தான். ஆயினும் இன்றைய நவீன யுகத்தில் மிகப் பெரும் அளவுக்கு கொலைகள் பெருகிவிட்டதைக் காண்கிறோம்.
அற்பமான காரணங்களுக்காகவும், கூலிக்காகவும் கொலைகள் நடக்கின்றன. நவீன ஆயுதங்கள் காரணமாக கொலைகள் எளிதாகி விட்டன. சொந்த பந்தங்களுக்கிடையிலும்,கணவன் மனைவிக்கிடையிலும் கூட கொலைகள் அதிகரித்துள்ளன.
சட்டத்தின் காவலர்களும் கூட கொலை செய்கின்றனர். போர்கள் மூலமும் கொல்லப்படுவோர் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
சமீப காலமாக உலகில் பூகம்பங்கள் மிகவும் அதிகமாகியுள் ளன. இதனால் இலட்சக் கணக்கான மக்கள் மாண்டு போகின்றனர்.
இத்தகைய பூகம்பங்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைக்கு குறையாமல் நடப்பதை நாம் காண்கின்றோம்.
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
No comments:
Post a Comment