மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

கியாமத் நாளின் அடையாளங்கள்🌏 தொடர் 13.


🌏கியாமத் நாளின் அடையாளங்கள்🌏 தொடர் 13.                 
 பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162.

1 - புகை மூட்டம்

இவற்றில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை.

ஆயினும் திருமறைக்குர்ஆனில் புகை மூட்டம் என்ற 44-வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை. 'எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்) அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். 'பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்' என்றும் கூறினர். வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள். மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம்.

திருக்குர்ஆன் 44:10 - 44:16

அந்தப் புகை வானிலிருந்து இறங்கி வரும். அதனால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும். அதைக் காணும் மக்கள் தம்மைத் திருத்திக் கொள்ள முன் வரும் அளவுக்கு அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.

மக்கா வாசிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த போது, புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் எனவே இந்த அடையாளம் ஏற்கனவே வந்து விட்டதாகவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 1007

இதை நாம் ஏற்கத் தேவையில்லை. ஏற்கவும் கூடாது. ஏனெனில் மதீனா சென்ற பிறகு தான் மேற்கண்ட பத்து அடையாளங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இனி மேல் தான் அவை ஏற்படும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

மக்காவில் ஏதோ ஒரு புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரம்மாண்டமான பத்து அடையாளங்களில் ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அதைக் குறிப்பிட்டிருக்க முடியாது.

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப் போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ மாலிக் (ரலி)

நூல்: தப்ரானி

அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர் களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர் களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப் பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.   

   தொடரும் இன்ஷா அல்லாஹ்....

No comments:

Post a Comment